சிதறிய கவித்துளிகள்...

மனம் சிதறிய சில கவித்துளிகளுடன் நான்...

வாழ...

சர்வ தேசங்களைச்
சுற்றி திரியும் காற்றே...

கனவின் கதவுகளை
திறந்து வை...

காணும் காட்சிகளை
நிஜங்களாக்கி,

மானிடரை
வாழ வழி செய்...

காத்திரு...

நிஜங்களில் வாழ்ந்தாலும்

கனவுகளை மறக்காதே.

கண் மூடி தெரிவது இல்லை கனவு...

கண் திறந்ததும் முடிவதுமில்லை கனவு...

கனவு கைசேரும் வரை

காத்திரு...

அதை வெல்லும் வரை

உயிர் கொள்...

மறந்து போகும் நான்...

கண் மூடி ரசிக்க தோணும்
மெல்லிய இசை நீ...

தேகத்தை வருடி விடும்
இள தென்றல் நீ...

இலைகளின் அசைவுகளில்
பேசிக் கொள்ளும் மெளனம் நீ...

கலைந்து கிடக்கும் மேகங்களின்
திரட்டேடு நீ...

காணும், உணரும் யாவற்றிலும் நீயாக
இருக்கும் போது, நான் யார் என்பதை மறந்து தான் போகிறேன்,
பரந்தாமனே...

அழகு என்பது...

வானவில்லில் மட்டுமில்லை
கொள்ளையழகு...
தன் இலைகளை மண்ணுக்குத் தானம்
தந்து விட்ட அந்த காய்ந்த மரத்துக்கும்
உண்டு உண்மையழகு...

நட்பு...

கரும்பொழுதை
மூச்சிரைக்க செய்யும்
பவளமல்லியின் மணமாய்
உன் நட்பு...

என் சுவாசத்தில்
எப்பொழுதும்
சுழன்ற வண்ணமாய்
இருக்கும்...

சில துளிகள்

ஆசைகள்

நீர் குமிழ்களைப் போன்றது
நொடி பொழுதில் காற்றில்
மிதந்து காணமல்
கரைபவை...
**********************************************
காதலி

யாரை வேண்டுமானாலும்
நீ காதலிக்கலாம்..
அவளைப் புரிந்து கொண்டும்,
அவளைக் கைப்பிடிப்பதும்,
சுலபமல்ல!
**********************************************
காதல் உணர்வு

முகம் உணர்வுகளின் பிரதியலிப்பு
என்கிறார்கள்..
காதல் வந்தால் மட்டும்
சல்லனமின்றி இருப்பது எனோ?
********************************************
விதிமுறைகள்

மனிதனை
நெறிப்படுத்துவதற்கே..
நெரிப்பதற்கு அல்ல!
*********************************************

மெளனமாகவே...

பூக்களிடம்
மெளனங்களைச் சேகரித்து
கொண்டு இருக்கிறேன்...

மழைத்துளி தன்னை வருத்தினாலும்,
பெருங்காற்று தன்னை தூர வீசி எறிந்தாலும்,
நிமிர்ந்து நின்று புன்னகை பூக்கும்
அந்த பூக்களிடமிருந்து,
மெளனங்களைச் சேகரித்து
கொண்டு இருக்கிறேன்...

என்னைப் பற்றி சில வரிகள்...

கவியுலகில் காலுன்றி நடைப் பயில ஆசை!
பிழையிருப்பின் கைநீட்டி உதவிக்கோரும் சிறு குழந்தை நான்!