சிதறிய கவித்துளிகள்...

மனம் சிதறிய சில கவித்துளிகளுடன் நான்...

அந்திம பூக்கள்

அந்தி வகுப்பை
உதறி தள்ளிவிட்டு
மரத்தாடியில் அவள்...

போவோர் வருவோர்
பார்வையிலிருந்து தப்பிக்க
புத்தகத்தில் தலைப்
புதைத்த வண்ணம்..

ஒரு தரம், அவள் பார்வை
கடிகார முள்ளை
துளைத்து விட்டு எதிரே
நீண்ட சாலையை நோக்க...

கண்களில் எதிர்பார்ப்பை
மிஞ்சுகின்றது ஏமாற்றம்!

சாலையோர பூக்கள்,
துயிர்கொள்ள ஆயுதமாகியும்..
எதிர்பார்த்தவன் வரவில்லை

மெல்ல எழுந்து நின்றவளின்
பார்வை இருண்ட
எதிரே படர்ந்த வெளியில்
அவன் இன்னொருவனின்
கைப்பிடித்து நடக்க...

கோபமும் அழுகையும்
இரு பரிமாணங்களாக
மாறி மாறி
அவளை தாக்க..

தன்னிலை மறந்தவளாக
கால்கள் வீட்டை நோக்கி
அடி வைக்கின்றன...

அந்திம பூக்களோ
நாளை வரும் விடியலை
எதிர்கொள்ள இருளில்
முகம்புதைக்கின்றன...

மழலை கவிதை

கைக்காட்டி
வானத்தைப் பார்த்து
சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள்
அந்த சின்ன கண்மணி...

அவளின் ஆனந்ததை
பங்கு கேட்க அவளருகில்
சென்றமர்ந்தேன்...

கண்கள் பளக்க
என்னைப் பார்த்தவள்
மெதுவாக கிசுகிசுத்தாள்
"பூவானம் கண்ணடிக்குது"

புரியாமல் இருண்ட
வானத்தைக் கூர்ந்தேன்
அவளைப் போல்
மணி மணியாய் கண்சிமிடியது
அவளமைத்த
நட்சத்திர பூவனம்!